;
Athirady Tamil News

பிரித்தானிய தம்பதியினரை கைது செய்த தலிபான்: வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ள 4 குழந்தைகள்

0

நீண்ட காலமாக ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்த பிரித்தானிய தம்பதி தலிபான் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய தம்பதி கைது
கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் கல்வித் திட்டங்களை வழங்கி வரும் 70 வயதைத் தாண்டிய பிரித்தானிய தம்பதியினர், தலிபான்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

79 வயதான பீட்டர் ரெனால்ட்ஸ்(Peter Reynolds) மற்றும் அவரது 75 வயது மனைவி பார்பி(Barbie) ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் காவலில் எடுக்கப்பட்டனர்.

அவர்களின் கைதுக்கான குறிப்பிட்ட காரணங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

1970 ஆம் ஆண்டில் காபூலில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினர், கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் வசித்து வருவதாகவும், 2021 ஆம் ஆண்டில் தாலிபான்களின் மறு எழுச்சி மற்றும் மேற்கத்திய ஆதரவு அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்க தம்பதியினர் முடிவு செய்ததாகவும் அவர்களின் வயது வந்த 4 குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.

தலிபான்களுக்கு வேண்டுகோள் கடிதம்
இந்நிலையில் தம்பதினரின் 4 குழந்தைகளும் தலிபான் உள்துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில் தங்கள் பெற்றோரின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஆப்கானிஸ்தான் சட்டத்திற்கு அவர்கள் அளித்த மரியாதை ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளனர். “அவர்கள் எப்போதும் தங்கள் இருப்பு மற்றும் வேலை பற்றி வெளிப்படையாக இருந்ததாகவும், சட்டங்கள் மாறும் போது அவற்றை விடாமல் மதித்து கீழ்ப்படிந்ததாகவும். அவர்கள் வேறொரு மதத்தை இதுவரை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மேலும் முஸ்லிம்களை மிகவும் நேசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.”

“அவர்கள் இங்கிலாந்தில் உள்ள குடும்பத்தினருடன் இருப்பதை விட ஆப்கானிஸ்தானை தங்கள் வீடாக தேர்வு செய்துள்ளனர், மேலும் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆப்கானிஸ்தானில் செலவிட விரும்புகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் குடியுரிமையையும் கொண்ட இந்த தம்பதியினர், கைது செய்யப்பட்ட பின்னர் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொண்டு, மேற்கத்திய அதிகாரிகள் தலையிட வேண்டாம் என்று வெளிப்படையாக கோரியதாக கூறப்படுகிறது.

இந்த நிலைமை குறித்து தங்களுக்கு தெரியும் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் ஒப்புக் கொண்டுள்ளது, ஆனால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

தலிபான் அரசாங்கத்தை பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை மற்றும் இதனால் காபூலில் தூதரகத்தை பிரித்தானியா பராமரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.