100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)
இலங்கையில் புதிய அரசு பொறுப்பு ஏற்றுள்ள சூழலில், நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது.
அண்டை நாடான இலங்கையில் மிக மோசமான பொருளாதார நிதிக் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
இந்த பொருளாதார நெருக்கடி விரைவிலேயே அங்கு அரசியல் நெருக்கடியாகவும் மாறியது. இதனால் அந்நாட்டின் பிரதமர், அதிபர் ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இலங்கை இதனால் இலங்கையில் மிகவும் பதற்றமான ஒரு சூழல் உருவானது. மக்கள் போராட்டமும் ஒரு புறம் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து பொறுப்பு அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார். இலங்கையின் புதிய பிரதமராக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக் கொண்டார். அன்றைய தினமே போராட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிபர் அலுவலகம்
இது இலங்கை போராட்டக்காரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது, இருப்பினும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர புதிய அரசு பல நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதற்கிடையே போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட இலங்கை அதிபரின் செயலகம், சுமார் 100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று செயல்படத் தொடங்கியது. இதனை இலங்கை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
100 நாட்கள்
முன்னதாக கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி அதிபரின் செயலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் நுழைவு வாயிலை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு அடைத்தனர். அப்போது முதலே அதிபரின் அலுவலகம் செயல்படாமலேயே இருந்தது. இதற்கிடையே ஜூலை 9ஆம் தேதி போராட்டக்காரர்கள் கட்டிடத்தின் உள்ளே புகுந்து அதனை ஆக்கிரமித்தனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் உருவானது.
பாதுகாப்புப் படையினர்
இந்தச் சூழலில் புதிய அரசு பதவியேற்றதும், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அதிபரின் அலுவலகத்தில் அதிரடியாக உள்ளே புகுந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். மேலும், அதிபர் அலுவலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்தச் சூழலில் தான் இன்று முதல் இலங்கை அதிபர் அலுவலகம் மீண்டும் வழக்கம் போலச் செயல்பட தொடங்கி உள்ளது.
இலங்கை அரசு விளக்கம்
இலங்கையில் இக்கட்டான சூழல் நிலவி வரும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளதைச் சர்வதேச அளவில் பலரும் கண்டித்து உள்ளனர். இருப்பினும், அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுவதை அரசு ஆதரிக்கும் என்றும் இருப்பினும் அமைதியான போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய இலங்கை எச்சரித்ததுள்ளது.