கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)
சிங்கப்பூரில் இருந்துவரும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடவில்லை என்றும், விரைவில் நாடு திரும்புவார் என்றும் அங்குள்ள அமைச்சர் குணவர்த்தனா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. நான்கு புறமும் கடல் சூழ்ந்த அழகிய தீவு தேசமான உள்ள இலங்கை மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை இன்று அந்த நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
அன்னிய செலவாணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது. பெட்ரோல், டீசல் உள்பட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவியது. இதனால், மக்கள் வெகுண்டெழுந்தனர்.
தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே
தங்களின் இந்த நிலைமைக்கு ஆட்சி அதிகாரத்தை தன்னிடம் வைத்திருந்த ராஜபக்சே சகோதரர்களே காரணம் என நினைத்து அவர்களுக்கு எதிராக கடும் போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் வன்முறை வெடித்து இலங்கை பற்றி எரிந்தது. மக்களின் போராட்டத்துக்கு அஞ்சி முதலில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். ஆனால், அதிபர் பதவியில் இருந்து முதலில் விலக மறுத்து அடம் பிடித்த கோத்தபய ராஜபக்சே, மக்கள் அதிபர் மாளிகையை சுற்றிவளைத்ததால், வேறு வழியின்றி தப்பி ஓட்டம் பிடித்தார்.
சிங்கப்பூரில் அடைக்கலம்?
இதையடுத்து சிங்கப்பூரில் பதுங்கியிருக்கும் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய அதிபராக ரணில் விக்ரம்சிங்கே பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் குழு ஒன்று சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலிடம் 63 பக்க குற்ற புகார் ஒன்றை அளித்துள்ளது. அதில், கடந்த 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில், ஜெனீவா ஒப்பந்த விதிகளை மீறி கோத்தபய ராஜபக்சே செயல்பட்டு உள்ளார். குறிப்பாக இலங்கை உள்நாட்டு போரின்போது, சர்வதேச குற்ற சட்டத்தின் விதியை மீறி கோத்தபய ராஜபக்சே செயல்பட்டார் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விரைவில் இலங்கை திரும்புவார்
இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபரான கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை என்றும், அவர் ஓடி ஒளிந்திருக்கவில்லை என்றும் இலங்கையின் செய்தி தொடர்பாளர் மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகங்களுக்கான அமைச்சர் குணவர்த்தனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தபி ஓடவில்லை. விரைவில் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவார்” என்று கூறியுள்ளார். கோத்தபய ராஜபக்சே எப்போது இலங்கை திரும்புவார் என்பது குறித்து அவர் பதில் தெரிவிக்கவில்லை.
அடைக்கலம் கோரவில்லை
இலங்கையில் இருந்து தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து வரும் நிலையில், சிங்கப்பூரில் உள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம், கோத்தபய ராஜபக்சே தங்களிடம் அடைக்கலம் கோரவில்லை என்றும் தனிப்பட்ட பயணமாகவே விமானத்தில் அவர் சிங்கப்பூர் வந்தார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சிங்கப்பூர் அரசு கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை. யார் வேண்டுமானாலும் சிங்கப்பூர் நாட்டில் தங்கிவிட்டு செல்லலாம் என்றும் கூறியுள்ளது.