இலங்கை! ராணுவ ஆட்சியா அல்லது பொது தேர்தலா? எதை நோக்கி நகர்கிறது இலங்கை!! (படங்கள்)
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டே நிலைமை கையை மீறிப் போகும் எனச் சொல்லப்பட்டது.
இருப்பினும், கடந்த ஆண்டு நிலைமையைச் சமாளித்துவிட்டனர். இருப்பினும், இந்த ஆண்டு நிலைமை விரைவில் மோசமடைய தொடங்கியது. இலங்கை இலங்கை எரிபொருள், மின்சாரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் பல பகுதிகளில் பல மணி நேரம் வரை கூட மின்வெட்டு நிலவுகிறது. மின்சாரம் இல்லாததால் இலங்கை நாட்டின் தொழிற்துறை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் கூட இலங்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சொல்லில் அடங்காத இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ராஜினாமா
இதன் காரணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் முதலே பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடி அங்கு அரசியல் குழப்பத்திற்கும் வித்திட்டு உள்ளது. மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி, முதலில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். இப்போது அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்து வெளிநாட்டிற்கும் தப்பி ஓடி உள்ளார்.
சிக்கல்
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு இப்போது பொறுப்பு அதிபராக இருக்கும் சூழலில், புதிய அதிபர் மிக விரைவாகத் தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ராஜப்கச் ராஜினாமா செய்துள்ளதை போராட்டகாரர்கள் கொண்டாடினாலும் கூட இப்போது போராட்டம் ஓய்வதாகத் தெரியவில்லை. இதன் காரணமாக இலங்கையில் இப்போது மிகவும் சிக்கலான சூழல் உருவாகி உள்ளது.
சஜித் பிரேமதாச
ராஜபக்ச ராஜினாமா செய்து இருந்தாலும் கூட அவர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்குத் தான் அதிக இடங்கள் உள்ளன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை முடிவு செய்யும் இடத்தில் அவர்கள் உள்ளதால், புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாச வலியுறுத்தி வருகிறார்.
அடுத்து என்ன
மக்களைச் சந்தித்து, அவர்கள் மூலம் புதிய அரசையும் அதிபரையும் தேர்வு செய்வதே சரியாக வரும் என அவர் நம்புகிறார். நிலைமையை மேம்படுத்தக் கடுமையான நிதி மற்றும் அரச சீர்திருத்தங்கள் தேவை என்பதால் மக்கள் ஆதரவுடன் இருக்கும் அரசு தேவை. தங்கள் ஆட்சியில் பொருளாதாரம் இந்தளவுக்கு மோசமாகவில்லை என்பதால் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பது அவரது நம்பிக்கை! சரி, இப்போது இலங்கையில் அடுத்த என்ன நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்..
முதல் ஆப்ஷன்
முதலில் தற்காலிக தீர்வாக ரணில் விக்கிரமசிங்க ஆக்டிங் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் முன்னர் இதே நிலை மேலும் கொஞ்சக் காலத்திற்கு அங்குத் தொடர வாய்ப்பு உள்ளது. அனைத்து கட்சிகளும் ரணிலை ஆக்டிங் அதிபராக இருக்க ஆதரவு தெரிவித்தே வருகிறது. ஆனால், இதில் இருக்கும் மற்றொரு சிக்கல், இலங்கைக்குத் தேவையான பொருளாதார மாற்றத்திற்கு மிகவும் அவசியமான சீர்திருத்தங்களைச் செய்ய முடியாது. தற்போதைய சூழலில், எவ்வித நிவாரணமும் இல்லாமல் மக்களைத் துன்பத்தில் வைத்திருப்பது வன்முறைக்கு வழிவகுக்கும்.
அடுத்த ஆப்ஷன்
அடுத்து வாய்ப்பு, இப்போது சிதறிக்கிடக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இணைவது. ராஜபக்ச ஆட்சியை அகற்றுவது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இணைய வேண்டும். ஆனால், இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பலம் வாய்ந்த கட்சிகளுக்கு இப்போது மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. இப்போது மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கும் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பெரிய இடம் இல்லை, எனவே, இப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் அரசியலமைப்பிற்குப் புறம்பான ஆட்சி மாற்றத்தை முன்னிறுத்துகின்றனர். ராஜபக்ச மற்றும் விக்கிரமசிங்கவின் பிடிவாதத்தால் அரசியலமைப்பு ரீதியான ஆட்சி மாற்றம் சாத்தியமற்றதாக இருப்பதால் இது தான் ஒரே தீர்வு என்பதைப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் திரும்பத் திரும்ப முன்னிறுத்துகிறார்கள்.
மூன்றாவது ஆப்ஷன்
ராணுவ-ஆதரவு ஆட்சி! ஒரு வகையான கலப்பு அரசு. ராணுவம் ஆதரிக்கும் ஒரு ஆட்சியை அமைப்பது. இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனநாயக ஆட்சி முக்கியம் என்றாலும், நிலைமையைச் சமாளிக்க ராணுவ பலமும், ஆயுதமும் தேவைப்படும். இருப்பினும், இந்த ஆப்ஷன் எல்லாம் மூன்று மாதங்கள் மட்டும் சரிப்பட்டு வரும். அதற்கு மேல் இவை தாங்காது. தேர்தல் நடத்தி மக்கள் ஆதரவு உடன் ஆட்சி அமைப்பது மட்டுமே தீர்வுக்கான தொடக்கமாக இருக்கும்.