;
Athirady Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ரணில் விக்கிரமசிங்க உட்பட 4 பேர் போட்டி! சபாநாயகருடன் இந்திய தூதர் ஆலோசனை !!

0

இலங்கை புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர். இலங்கையின் பதற்றமான அரசியல் சூழலில் அந்நாட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பாவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இலங்கையை பொருளாதார சீரழிவில் இருந்து மீட்க முடியாமல் போனதால் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்சே, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவிகளை ராஜினாமா செய்தனர். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே இலங்கையைவிட்டு தப்பி ஓடி தற்போது சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய விலகியதைத் தொடர்ந்து இடைக்கால பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, புதிய தற்காலிக ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இதையடுத்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களால் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கோத்தபாய ராஜபக்சே பதவி விலகிய 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆகையால் வரும் 20-ந் தேதி புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

தற்போதைய நிலையில் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜேவிபி தலைவர் அனுரா குமாரதிசநாயக மற்றும் டல்லஸ் அல்லபெரும உள்ளிட்டோர் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் உள்ளனர். இலங்கை எம்.பி.க்கள் இந்த 4 பேரில் ஒருவரை ஜனாதிபதியாக தேர்வு செய்ய உள்ளனர். உலக நாடுகள் இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்வை உன்னிப்புடன் கவனித்து வருகின்றனர்.

இத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 140க்கு அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாவார் என அவரது ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இலங்கையை ஆசியாவின் அதி சிறந்த நாடாக மாற்றுவார்; உலக நாடுகளில் சிறந்த நாடாகவும் மாற்றுவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனேவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து உரையாடினார். இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் இலங்கை நாடாளுமன்றத்தின் பங்களிப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.