;
Athirady Tamil News

பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது!! (வீடியோ)

0

தற்போது மக்களின் விருப்புகளை பிரதிபலிக்காத, நம்பக்கத்தன்மையை இழந்த ஒரு அவையாக இயங்குவதால் இப்பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது. நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்களுடன் இணைந்து இந்த நிலையை தீர்ப்பதென்பது எப்படிச் சாத்தியமாகும்? எனவே, ஒரு தேர்தல் நடத்தப்பட்டு புதியதொரு மக்கள் ஆணை பெறப்படுவதன் மூலமே இப்பிரச்சினையில் இருந்து மீளெழ முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தம் சொந்த இனத்திடமே பொய் கூறி அவர்களை ஏமாற்றி அவலநிலைக்கு உள்ளாகியிருக்கும் சிங்களத் தலைவர்கள், தமிழ் மக்கள் தொடர்பிலும், சமஷ்டி தொடர்பிலும் கூறிய விடயங்களில் உண்மைத்தன்மை இருக்குமா? என்பதை இத்தருணத்திலாவது சிங்கள மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல் தொடர்பிலான நிதி அமைச்சரின் அறிக்கை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலின் பின்னர், நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை தொடர்பான அமைச்சக அறிக்கை தொடர்பாக இன்று விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அந்த அறிக்கையில் நிதி அமைச்சர் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்திருக்குமென தாம் கருதும் விடயங்களை, தமது அரசாங்கத்தின் தவறான முடிவுகள் உள்ளடங்கலாக, பட்டியலிட முனைந்திருக்கிறார். அத்துடன் நின்றுவிடாது, வழமைபோன்று, இந்த அரசாங்கத்தின் மீது முழுப்பொறுப்பையும் சுமத்தாது, தொடர்ச்சியாக ஆட்சிசெய்த முன்னைய அரசாங்கங்கள் மக்களைக் கவருவதற்காக மேற்கொண்ட பல்வேறு தவறான நடவடிக்கைகளும், ஈற்றில் இந்நிலை உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளன எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஆனால் யாராலும் ஒருவராலும் மறுதலிக்க முடியாத ஒருவிடயம் ஒன்றுள்ளது. உண்மையில் அதனை நிதி அமைச்சர் கூட ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில் அந்தத் தேர்தலை இலக்கு வைத்து அறிவிக்கப்பட்ட வரி நீக்கம் மற்றும் வரிவிலக்கு நடவடிக்கைகளும் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலை உருவாவதற்கு காரணமாக இருந்தது என்பதனை இவ் அவையில் உள்ள எவராலும் மறுதலிக்க முடியாது.

இந்த நாட்டின் பொருளாதாரம் அடிமட்டத்துக்குச் சென்று, கடன் சுமை கழுத்தை நெரிக்குமளவுக்கு சென்றமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. இவையே, இலங்கைக்கான சர்வதேச சந்தைகளின் கதவுகள் மூடப்பட்டு, கடன்படுதிறன் சுட்டி கீழ் நிலைக்குச் சென்றுள்ளதுடன், கடன்கள் மறுக்கப்படும் நிலையை உருவாக்கி இந்த நாட்டை இன்றைய நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

இவ்வாறான நடவடிக்கைகள் இறுதியில் பாரிய பொருண்மிய நெருக்கடியை ஏற்படுத்துமென, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கட்சி வேறுபாடின்றி எச்சரித்திருந்த நிலையிலும் அவற்றைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு அரசாங்கம் செயற்பட்டமையின் விளைவே, இன்று நாடு எதிர்நோக்கும் இந்தநெருக்கடியாகும். இந்நிலையில் கோவிட் நிலவரமும் சேர்ந்துவிட, நாட்டின் பொருளாதாரம் முடங்கல் நிலைக்குச் சென்றது.

எனக்கு நன்கு ஞாபகமிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடக்கவிருந்த போது, கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக பின்போடப்பட்டது. அப்போது எதிர்க் கட்சியிலிருந்தவர்கள், வடக்கு கிழக்கிலிருந்து தெரிவானவர்கள் உள்ளடங்கலாக, இவ்வாறான வரிவிலக்கு நடவடிக்கைகள் நாட்டைபெரும் பொருண்மிய இக்கட்டுக்குள் சிக்க வைத்துவிடும் எனத் திரும்பத் திரும்ப எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். அப்போது நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இங்கு இருக்கவில்லை. ஆனால், இந்த அரசாங்கம், குறிப்பாக ஜனாதிபதி எதிர்தரப்பினரின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கவில்லை. ஐனாதிபதித் தேர்தலில் கிடைத்த பெரும்பான்மை அவர்களுக்கு அதிகாரபோதையை ஏற்படுத்தியிருந்தது.

வர்த்தக சமூகத்தினரும் பல முன்னணி பொருளியலாளர்களும் ஜனாதிபதிக்கு இதுகுறித்து பல கடிதங்கள் கூட எழுதியிருந்தார்கள். ஆனால், அவற்றுக்குப் பதில்கூட அளிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை பொறுப்புடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறு எவரையும் மதிக்காத திமிர்த்தனமான அணுகுமுறையுடன்தான், ஜனாதிபதி விடயங்களைக் கையாண்டார். அதேவேளை, அவரது அரசாங்கம் ஒரு படி மேலே சென்று ஜனாதிபதி எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பதையே கடமையாக கொண்டிருந்தது .

இவைதான் யதார்த்தமாக இருக்கின்ற நிலையில், இந்த கடும் பொருளாதார நெருக்கடிக்கு நேரடியாக முகம்கொடுக்கும் சாதாரண மக்கள், தாம் எத்தகையதொரு தவறை இழைத்து விட்டோம் என இப்போது உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த ஜனாதிபதியினதும் இவ்வரசாங்கத்தினதும் முடிவுகளால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், இந்நாட்டின் மக்கள், இனிமேலும் இவ்வரசாங்கம் ஆட்சியில் இருக்ககூடாது என கூறுகிறார்கள்.

அதை செவிமடுக்ககூட இந்த ஜனாதிபதியும் அரசங்கமும் தயாராக இல்லாத போது, தமது ஜனநாயக ரீதியான எதிர்ப்பை காட்டுவதற்கு வீதிகளில் இறங்குவதை தவிர இந்த மக்களுக்கு வேறுதெரிவுகள் இருக்கவில்லை.

ஜனநாயக முறையின் படி மக்கள் ஒரு குறித்த காலத்துக்கு ஆட்சிபுரிவதற்கான ஆணையை வழங்கிய நிலையில், தாம் வழங்கிய ஆணை மீறப்பட்டதை உணரும்போது, தாம் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பததை உணரும்போது, மக்களுக்கிருக்கும் ஒரே தெரிவு தாம் வழங்கிய ஆணையை மீள பெற்றுக்கொள்வது மட்டும்தான். ஆனால் இவ்வாறு தாம் வழங்கிய ஆணையை மீளப்பெற்றுக்கொள்வதற்கு சட்டரீதியாக ஏற்பாடுகள் எதுவும் இல்லாதிருப்பதால், மக்களின் முன் இருக்கும் ஒரே தெரிவு வீதிகளில் இறங்கி தாம் ஆணை வழங்கியவர்களை ஆட்சியில் இருந்து விலகுவதை உறுதிப்படுத்தும் வரை போராடுவது மட்டும் தான்.

வீதிகளில் மக்கள் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்ற அதே நேரம், நாங்கள் இங்கே பாராளுமன்றத்தில் ஒருநாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருகின்றோம். அது என்ன நாடகம்? யதார்த்தம் என்னவெனில் இப்பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது. இந்த அவை உண்மையில் நாட்டுமக்களின் பொறுப்புகளை பிரதிபலிக்கவில்லை. ஆனால், தமக்கு நம்பகத்தன்மை இருக்கின்றது எனக் காட்டிக்கொள்வதற்காக இங்கு ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. மூன்று நான்கு வாரங்களுக்கு முன்னர்வரை இந்த அரசாங்கதிற்கும் ஜனாதிபதிக்கும் கண்ணை மூடிக்கொண்டு மூர்க்கத்தனமாக ஆதரவு வழங்கிய மிக நெருக்கமான கூட்டாளிகளாக இருந்த சில அரச தரப்பு உறுப்பினர்கள், திடீரென தாம் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்து எதிர்த்தரப்பில் வந்து அமர்ந்துகொண்டார்கள். சரியாக ஒரு மாதத்திற்கு முன்னதாக இதே அவையில் இந்த சுயாதீன உறுப்பினர்கள் என தம்மைதாமே அழைத்துகொள்ளும் இந்த உறுப்பினர்கள் தாம் எதிர்த்தரப்பில் அமரவிருப்பதாக அறிவித்தபோது, இது ஒரு நாடகம் என்பதை நான் அந்த இடத்திலேயே குறிப்பிட்டிருந்தேன் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். எனக்கு முன்னர் பேசிய கௌரவ ஜகத் புஷ்பகுமார அவர்கள் இன்றைக்கு எதிர்க்கட்சிகளின் பக்கத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். ஆனால் அவர் இன்று இங்கு பேசியவையெல்லாம், இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருப்பதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருந்தது. அவர் என்ன கூறினார் என்பதை பாருங்கள், முதல் விடயமாக அவர் கூறியது ஜனாதிபதிக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது அர்த்தம் இல்லையென்றும் அதன்முலம் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியாதென்றும் கூறினார். ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யவேண்டுமாயின், குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்பட்டு 2ஃ3 பெரும்பான்யுடன் நிறைவேற்றப்படவேண்டும், ஆனால் இங்கு எதிர்த்தரப்பிடம் 2ஃ3 பெரும்பான்மை இல்லை, ஆகவே ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் இந்த முயற்சிகள் எல்லாம் நடைமுறை சாத்தியமற்றவை, மக்களை ஏமாற்றும் முயற்சி எனக் கூறியிருந்தார். இத்தனைக்கும் தான் எதிர்த்தப்பில் இருப்பதாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார்.

சரி, அப்படி ஒரு சட்டவலுவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதாயின் அதை அரசங்கத்துக்கெதிராக கொண்டுவர முடியும். அதற்கு இந்த “எதிர்க்கட்சி“ உறுப்பினர் கூறுகிறார். எஸ்.ஜே.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்வு எதுவெனத் தெரியாமல், அரசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு தாம் ஆதரவு தரமுடியாதெனக் கூறுகிறார். இது மிக இலாவகமாக தப்பிக்கும் செயலாகும், இப்படித்தான் கூறித்தப்ப போகிறீர்க்ள் என்றால், நீங்கள் எல்லாரும் எதற்காக எதிர்த்தரப்பில் வந்து அமர்ந்திருக்கிறீர்கள்? இவர்கள் உண்மையில் என்ன கூற விரும்புகிறார்கள் என்றால், அவர்களின் சொற்களில் பொதிந்திருக்கும் அர்த்தம் என்னவென்றால், மக்களின் கருத்துகளுக்கு எதுவித மதிப்பும் அளிக்கத் தேவையில்லை, இப்போது இருக்கின்ற இதே நிலமையும் முறைமையும் தான் இனியும் தொடர வேண்டும் என்பதேயாகும் . இந்த சிக்கல் நிலையில் இருந்து நாடு வெளியில் வரவேண்டுமென்றால் இங்கு ஒரு தேர்தல் நடைபெறவேண்டும். இதையே நான் கடந்தமாத அமர்விலும் வலியுறுத்தியிருந்தேன். ஒரு புதிய தேர்தல் நடந்து, அதை தொடர்ந்து இந்த அவையில் இருப்பவர்கள் குறித்து மக்களுக்கு நம்பிக்கை வரும் வரைக்கும், மக்கள் வீதிகளில் இருந்து கலைந்து போகப்போவதில்லை.

இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஏதாவது முயற்சி எடுக்கவேண்டுமாயின், இந்த நாட்டை இப்படி வங்குரோத்தடையச் செய்த அதே நபர்களுடன் தான் இணைந்து வேலைசெய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருப்பது தான் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன் இருக்கின்ற மிகப் பெரியசவால். நாட்டை வங்குரோத்துக்குக்கு உள்ளாக்கியவர்களே இந்த அவையின் 2ஃ3 பங்கினராக இருக்கின்ற நிலையில், எந்த கட்சியாவது, இந்த நடப்பு பாராளுமன்றத்தின் ஊடாக இந்த நிலமைகளை ஏதாவது ஒருவழியில் சீர்செயலாம் என எண்ணினால், அதில் இந்த நிலமைக்கு காரணமான அரச தரப்பின் அரைவாசிக்கும் அதிகமானோரோடு இணைந்து வேலை செய்ய வேண்டிய நிலை உருவாகும். அப்படி நாட்டை வங்குரோத்து அடையச்செய்தவர்களுடன் இணைந்தே, இந்த வங்குரோத்து நிலையை தீர்ப்பது என்பது எப்படிசாத்தியமாகும்?

எனவே, ஒரு தேர்தல் நடத்தப்பட்டு புதியதொரு மக்கள் ஆணை பெறப்படுவதன் மூலமே இப்பிரச்சினையில் இருந்து மீளெழ முடியும். அதற்குத்தான் இப்போது நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். எவ்வளவு தூரத்துக்கு நீங்கள் தேர்தல்களை பிற்போடுகிறீர்களோ, அவ்வளவிற்கு இன்று நாம் எதிர்கொண்டிருக்கின்ற இந்த அரசியல் நெருக்கடி, மேலும் மோசமான நிலையை எட்டும். இந்த அவையானது தற்போது மக்களின் விருப்புகளை பிரதிபலிக்காத, நம்பக்கத்தன்மையை இழந்த ஒரு அவையாக இயங்குவதால், இந்த அரசியல் நெருக்கடி, ஒரு கலவரமாகவும் மாறக்கூடும். கலவரங்கள் ஏற்படும் போது என்ன நடக்கும்? எங்களுக்கு இன்று ஒரு ஜனாதிபதி வாய்த்திருக்கிறார், அவர் இந்த அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இராணுவ அதிகாரிகளை அமைச்சரவை அதிகாரிகளாகவும் செயலாளர்களாகவும் தொடர்ந்தும் நியமித்து அதில் மகிழ்ச்சியைக் கண்டுகொண்டிருக்கிறார். இப்படியான ஒரு பின்புலத்தில், மக்களின் குரல்கள் செவிமடுக்கப்படாத விசனத்தில் மக்கள் அடுத்த நடவடிக்கைகளில் இறங்கினால், என்ன செய்வீர்கள்? நீங்கள் இராணுவத்தை மக்கள் மேல் கட்டவிழ்த்து விடுவீர்கள். அதுதான் நடைபெறப்போகிறது.

அத்தகைய ஒரு தருணத்தை நோக்கித்தான் இந்த ஜனாதிபதியும் அரசாங்கமும் விடயங்களை நகர்த்தி வருகிறார்கள். இந்நிலையில் இங்கு அவையில் எதிர்த்தரப்பில் இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது நம்பகத்தன்மையை தக்கவைக்க வேண்டுமாயின், இப்பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும். அதற்கான 2ஃ3 பெரும்பான்மையினை எமக்கு தாருங்கள், அப்போதுதான் நாம் ஒரு பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியைக் கோரமுடியும். ஏன் பாராளுமன்ற தேர்தல் வேண்டும் என கேட்கிறேன்? என்பதற்கு இன்னொரு காரணம். ஏதோ ஒரு காரணத்துக்காக ஜனாதிபதி இன்றோ நாளையோ ராஜினாமா செய்கிறார் என வைத்துக்கொண்டால், இந்த நடப்பு பாராளுமன்றம் தான் இன்னொரு ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டியிருக்கும். இப்பாராளுமன்றமே மக்களின் நம்பகத்தன்மையை இழந்துள்ள நிலையில், காலாவதியான ஒரு நாடாளுமன்றம் எப்படி தம்முள் இருந்து ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வது? எனவே புதிய தேர்தல் ஒன்றின் மூலம் புதிய மக்கள் ஆணை பெறப்பட வேண்டும். இது தான் எமது கட்சியின் நிலைப்பாடு, இவ்விடயத்திற்கு நாம் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு இதனை நாம் சவாலாகவே விடுகிறோம். கௌரவ புஸ்பகுமார போன்றவர்களுக்கு சவாலாக விடுகிறோம். அவர்கள் நம்பகத்தன்மை கொண்டவர்களாக இருப்பின் இந்த அவையை கலைப்பதற்கு ஆதரவு வழங்குங்கள். அதற்காக மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டுவீர்களானால். அது ஜனாதிபதியை பதவியிலிருந்து இறக்குவதற்கும் வழிவகுக்கும். இதனை நீஙகள் செய்யத் தவறுவீர்களானால் நீங்கள் இந்நிலைக்கு பொறுப்பாளிகளாவீர்கள். இதற்கான பொறுப்புக் கூறவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். இன்று இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒரு தீர்க்கமான ஆட்சிக் கட்டமைப்பு மாற்றம் ஏற்படவேண்டும் என்பதையே விரும்புகின்றார்கள். இதையே இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ருவிட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார். தீர்க்கமானதொரு மாற்றத்தையே அவர் கூறுகிறார் என்று நம்புகிறேன். ஏனெனில் இந்த நாட்டின் முழு கட்டமைப்புமே ஒரு தோல்வியடைந்த செயலிழந்த கட்டமைப்பாக மாறியுள்ளதென்பதை அரசியல்வாதிகளும் நாட்டு மக்களும் உணர்ந்துள்ளார்கள்.

இதனையே எதிர்த்தரப்பில் இருக்கும் தமிழ் கட்சிகள் இன்று மட்டுமல்ல, எப்போதும் கூறிவருகிறார்கள். இந்த நடப்பு அவையில் மட்டுமல்ல தொடர்ச்சியாக 70 ஆண்டுகளாக ஒவ்வொரு பாராளுமன்ற அவைகளிலும் இந்த நாட்டின் கட்டமைப்பு மாற வேண்டும் என்பதையே மீளவும் மீளவும் தெரிவித்து வருகின்றார்கள். இன்று நடைமுறையில் உள்ள ஆட்சிக் கட்டமைப்பானது ஒருபோதும் சீராக செயற்படப் போவதில்லை. ஏனெனில், இந்நாட்டு மக்களில் ஒருபகுதியினர் இக்கட்டமைப்பை ஏற்றுக்கொள்வில்லை. தமிழர்கள் இக்கட்டமைப்பை நிராகரித்துவிட்டார்கள். முஸ்லீம்களும் இந்த ஆட்சிக்கட்டமைப்பை நிராகரிக்கும் குரலை தற்போது அதிகளவில் ஒலிக்க தொடாங்கியிருக்கிறார்கள். ஏனெனில், இந்த நாட்டினுடைய சிங்கள பேரினவாதத்தின் பேரில், அல்லது பாதுகாப்பின் பேரில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்கள் யாரை இலக்கு வைக்கிறார்களோ அவர்களை இக்கட்டமைப்பினால் பாதுகாக்கவே முடியாது. பல்வேறு காரணங்களினால் இக்கட்டமைப்பு தோல்வியடைந்திருக்கிறது. இக்கட்டமைப்பு மாற்றப்பட வேண்டுமானால், எவ்வாறு மாற்றப்பட வேண்டும்? சிலவாரங்களுக்கு முன்னர் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தான் பதின்மூன்றாவது திருத்தச்சட்ட மூலத்தை அமுல்படுத்தப் போவதாகக் கூறியிருக்கிறார். பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தை அமுல்படுத்துவது என்றால் என்ன? கடந்த முப்பத்திநான்கு வருடமாக இருக்கும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலத்தில் எதனை அமுல்ப்படுத்தப் போகிறீர்கள்? இதுவரை அமுல்படுத்தாதவற்றை அமுல்படுத்தப்போகிறீர்களா? அது உங்களால் முடியாது. பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலம் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் உள்ளது. அது ஒற்றையாட்சி முறையில் உள்ளவரை உங்களால் அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்த முடியாது.

உயர்நீதிமன்றம் ஒரு தடவையல்ல முப்பது தடவைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாரப் பகிர்வினை முறையாக அமுல்படுத்துவதானால், பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினால் முடியாது. அரச கட்டமைப்பானது மாற்றப்படவேண்டும். அரச கட்டமைப்பை மாற்றுவது என்றால் என்ன? ஏற்கனவே இருக்கும் ஒற்றையாட்சி முறையிலிருந்து நீங்கள் விலகி, புதியதொரு கட்டமைப்புக்கு செல்லவேண்டும். இன்று இந்த அரசியல் கட்டமைப்பானது அரசாங்கத்தினுடைய சொந்த இனமாகிய சிங்கள இனத்தை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. தங்கள் கண்களுக்கு முன்னாலேயே தாங்கள், தங்கள் தலைவர்களால் பொய்கள் சொல்லப்பட்டு ஏமாற்றப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்ற அவலத்தை இன்று சிங்கள மக்கள் எதிர்கொண்டுவருகிறார்கள். இது தவறவிடக்கூடாத முக்கியமான ஒரு தருணம் என நான் கருதுகிறேன். சர்வதேச நாணய நிதியம் தொடர்பாகவும், இன்றைய பொருண்மிய நெருக்கடி தொடர்பானதுமான விவாதத்தில், நான் இவ்விடயத்தை வலியுறுத்திக் கூறுவதற்கு காரணமிருக்கிறது.

நான் இவ்வகையில் பலதடைவைகள் கூறியதுபோன்று, இப்போது முதற் தடவையாக இக்காரணங்களால் ஒருவாய்ப்பு உருவாகியிருக்கிறது. சிங்கள மக்கள் இன்று தங்களது தலைவர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள். இதனை என்னை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ஒரு பொய்யாக நான் கூறவில்லை. ஆனால், இது முக்கியமானதொரு தருணம். தமது தலைவர்கள் இந்நாட்டை அழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார்கள் என அவர்கள் உணர தொடங்கியிருக்கிறார்கள்.

இன்றைக்கு யுத்தம் நடக்கவில்லை. அப்படியாயின் கடந்த பதின்மூன்று வருடகாலத்தில் இந்த நாட்டை சீர்ப்படுத்தி உறுதி நிலைக்கு நீங்கள் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் நாட்டை படுகுழிக்குள் கொண்டு சென்றிருக்கிறீர்கள். இன்றைக்கு நீங்கள் வங்குரோத்து நிலையை அடைந்திருக்கிறீர்கள். முதற்தடவையாக அவர்களது தலைவர்களை நோக்கி சிங்கள மக்கள் கேள்வியெழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். தமது தலைவர்கள் எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள்மீது கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக நான் கூறுகிறேன்.

நாங்கள் சிங்கள பொதுமக்களை இது பற்றிச் சிந்திக்குமாறு கேட்கிறோம். தம் சொந்த இனத்திடமே பொய் கூறி அவர்களை ஏமாற்றி அவலநிலைக்கு உள்ளாகியிருக்கும் தமது தலைவர்கள், எப்படிப்பட்டவர்கள் என்பதனை இந்த தருணத்தில் உணர்ந்து கொண்டிருக்கும் சிங்கள மக்கள், இந்த நாட்டின் மற்றைய தரப்பினராகிய தமிழ் மக்கள் தொடர்பில் சிங்களத் தலைவர்கள் கூறிய விடயங்களில் உண்மைத்தன்மை இருக்குமா? என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். சமஸ்டி முறைமை என்பது பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று எதுவித கூச்சமுமில்லாமல் பொய் கூறி ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இன்றைக்கும் அதையே கூறிவருகிறார்கள். எனவே தான் சொல்கிறேன் இக்கேள்விகளை சிங்கள மக்கள் தங்கள் தலைவர்களிடம் கேட்கவேண்டும்.

இன்றைக்கு இந்த நாடு பாதுகாப்புக்கு பாதீட்டில் 19 சதவீதத்தைச் செலவிடுகிறது. அதில் 13 சதவீதம் நேரடியாக இராணுவத்திற்கு ஒதுக்கப்படுகின்றது. இது வருடாந்தம் இரண்டு சதவீதத்தால் உயர்த்தப்படவிருக்கிறது. இது யுத்தத்திற்கு பின்னரான நிலமை. இந்த நாட்டில் கல்விக்கும் சுகாதாரத்துக்குமாக சேர்த்து பத்து சதவீதத்துக்கும் குறைவாகவே வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகின்ற போது, யுத்தம் முடிவடைந்த பின்னர் கூட, பாதுகாப்பு செலவீனத்துக்கென 19 வீதம் ஒதுக்கப்பட்டு வருகிறது. கல்விக்கும் சுகாதரத்துக்கும் ஒதுக்கும் பணத்தை விட மிகப்பெரிய பங்கை இன்றைய இக்கட்டான நிலையில்கூட, இராணுவத்திற்கென ஒதுக்கும் இந்த கட்டமைப்பு, ஒரு நிலைபேறான வளர்ச்சியைக் கொண்டுவரும் என எவராலும் எதிர்பார்க்க முடியுமா?

போர் முடிந்து இத்தனை காலத்துக்கு பின்னரும் நாட்டையே பிடுங்கி தின்கிற அளவுக்கு ஒரு பூதமாக வளர்ந்து வருகின்ற ராணுவக் கட்டமைப்பை பேணவேண்டிய தேவை என்ன? என்பதை சிங்கள மக்கள் தங்களைத் தாங்களே கேள்வி கேட்கவேண்டிய ஒரு முக்கியமான தருணம் இது. இன்று கனிந்திருக்கிற இந்த சந்தர்ப்பத்தை தவறவிடவே கூடாது. தோல்வியடைந்திருக்கிற இந்த நாட்டின் கட்டமைப்பை மாற்றி, இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பை மாற்றி இந்த அழகிய தீவு தனியே சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரித்தானதல்ல என்பதை ஏற்று, இது சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் மலையகத்தமிழர்கள் பறங்கியர்கள் என அனைவருக்கும் உரித்தானது என்பதை ஏற்று, இந்த தீவில் சிங்கள மொழிபேசும் தேசமும் தமிழ்பேசும் தேசமும் இருக்கின்றது என்பதை அங்கீகரிக்கும் ஒரு சமஷ்டி கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இல்லாவிடில் இந்த நாட்டை ஒருபோதும் அழிவுப் பாதையில் இருந்து காப்பாற்றவே முடியாது போய்விடும்.

சாதாரண சிங்கள பொது மக்கள் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் இனியும் சிந்திக்காது விடின், இந்த மாற்றங்களை இன்று நீங்கள் நிகழ்த்தாது விடின், இந்த நாட்டின் பாதுகாப்பு செலவீனம் மேலும்மேலும் அதிகரித்து, நாட்டையே முழுமையாக அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். இன்றாவது சிங்களப் பொதுமக்கள் தமது தலைவர்களுடைய உண்மை நிலையினை அறிந்து கொண்டதன் பிற்பாடு மேற்குறித்த கேள்வியை கேட்டு ஒரு சரியான முடிவை நீங்கள் எடுக்காது விடின், நீங்கள்கூட இனவாத பாதையில் செல்வதாகவே நாம் முடிவெடுக்க வேண்டிவரும்.

சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் எனது தந்தையார் படுகொலை செய்யப்பட்டபோது, வெளிநாடுகளில் வாழும் எமது உறவினர்கள் என்னையும் எனது குடும்பத்தினரையும் வெளிநாடுகளுக்கு வந்துபுகலிடம் கோருமாறும் அங்கு வந்து குடியேறுமாறும் வற்புறுத்தினார்கள். இக்கட்டமைப்பு மாற்றமடைவது என்பது மிகமிக அரிதான விடயம் எனத் தெரிந்திருந்தும், எனது தந்தையார் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும் எனது உள்ளுணர்வு ஒன்றை சொல்லியது, “இது தலைவர்களின் தவறு. சாதாரண மக்களுக்கு உண்மை கூறப்படவில்லை, என்றைக்காவது ஒரு நாள் இந்த உண்மைகளை அறியக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு கிட்டும் பட்சத்தில் அவர்கள் மாற்றமடைவார்கள். சரியான முடிவுகளை எடுப்பார்கள்” என என் உள்ளுணர்வு கூறியதால், நான் நாட்டை விட்டு அகலும் முடிவை அன்று எடுக்கவில்லை.

நான் விரும்பியிருந்த அந்த அரிய தருணம் இப்போது கனிந்து வந்திருக்கிறது. இத் தருணத்திலாவது சிங்கள் மக்கள் தங்களது கண்களைத் திறக்காவிடில், இலங்கை தனித்து சிங்கள மக்களுக்கு என்றில்லாமல், தமிழர்கள், முஸ்லீம்கள், பறங்கியர்கள் என அனைவருக்குமானது என்பதனை ஏற்றுக்கொள்ளாமலும், சிங்களம் பேசும் தேசமும், தமிழ்பேசும் தேசமும் இந்நாட்டில் இருப்பதனை ஏற்றுக்கொள்ளாவிடில், அதற்கேற்ற முறையில் அரசகட்டமைப்பு சமஸ்டி முறைக்கு மாற்றப்படாவிடில், இந்நாடு தோல்வியடைந்த நாடாகவே தொடர்ந்தும் இருக்கும். இவற்றை ஏற்றுக்கொள்ளாவிடத்து நீங்கள் பாதுகாப்புச் செலவீனங்களை தொடர்ந்தும் அதிகரிக்கவே வேண்டியிருக்கும் என்பதனால் நாடு தொடர்ந்தும் தோல்வியடையும். புதிய தலைமுறை தமிழ்ச்சமூகம், புதிய தலைமுறை புலம்பெயர் சமூகம், புதியவழிமுறைகளின் மூலம் இவ்வரசினை தோல்வியுறச் செய்ய எத்தனிக்கும். ஏனெனில், இந்த அரசகட்டமைப்பு தங்களுக்கு எதிரானதான அமைந்திருப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள். இவ்வளவு காலமும் சிங்களத் தலைவர்களே இந்த நிலைக்கு காரணமானவர்கள் என்று கூறிவந்தோம். இன்றைக்கு தாங்கள் தங்களது தலைவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளதனை நன்கு உணர்ந்திருக்கிற சிங்கள மக்கள், தமிழர்கள் மீதுதான் தவறு இருந்துவந்திருக்கிறதாகக் கூறமுடியாது. அவ்வாறு அவர்கள் கூறுவார்களேயானால், துரதிர்ஷ்டவசமாக அங்கும் இனவாதம் இருப்பதாகவே கருதவேண்டியிருக்கும்.

ஆனால், கொழும்பிலே பிறந்து அங்கேயே படித்து வளர்ந்து, மிக நெருக்கமான சிங்கள நண்பர்களைக் கொண்டவன் என்கிற வகையில், நான் மேலே சொன்னதைப் போல நீங்களும் இனவாதிகள் தான் என முடிவெடுக்க வேண்டிவரும் என்ற நிலையைப் பொய்யாக்குவீர்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு என்பதையும் நான் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.



அலி சப்ரி எம்.பியின் வீட்டுக்கு தீ வைப்பு !! (வீடியோ, படங்கள்)

ராஜபக்ஷவின் பூர்வீக வீடும் தீக்கிரை !! (வீடியோ)

நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு சட்டம்!! (வீடியோ)

இன்றைய குழப்பம் உருவாக அரசாங்கம் தீட்டிய திட்டமே காரணம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் தகவல்!! (வீடியோ)

அலரிமாளிகையில் பதற்றம்; கண்ணீர் புகை தாக்குதல்!! (வீடியோ, படங்கள்)

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து!!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !!

நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு – பாராளுமன்ற உறுப்பினர் பலி – சிசிரிவி காணொளி!!

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் அமெரிக்கா!!

மாளிகாவத்தையில் பஸ்ஸூக்கு தீவைப்பு !!

நிட்டம்புவை சூடு: சிலர் காயம்; ஒருவர் கவலைக்கிடம்!!

மஹிந்தவைக் கைது செய்ய வேண்டும் !!

அமைச்சரவையும் கலைக்கப்பட்டது !!

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த !!

பதற்றத்தில் இலங்கை !!

நாடு முழுவதிற்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் !!

சற்றுமுன் மஹிந்த வெளியிட்ட அறிவிப்பு !!

மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் !!

துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர் !!

“கோடா ஹோ கம” தரைமட்டம் !! (வீடியோ)

களத்துக்கு வந்தார் அநுர !!

இன்று தாக்கினால் நாளை வருவேன் !!

அலரிமாளிகைக்கு வெளியே பதற்றம்; ஊடகவியலாளர் மீது தாக்குதல் !!

பிரதமரின் விஷேட உரை !!

பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டம்!! (வீடியோ)

“மஹிந்த விலகாவிட்டால் நாங்கள் விலகுவோம்” அதிரடி அறிவிப்பு !!

இந்த சிக்கலை தீர்க்க இது தான் ஒரே வழி !!

’’உகண்டாவில் பதுக்கி வைத்திருக்கும் புலிகளின் தங்கத்தை கொண்டு வா’’ !!

’அரசியலமைப்பு சீர்திருத்தம் அவசியம்’ !!

’பேச்சுவார்த்தை வெற்றி’ !!

’ஜனாதிபதியின் கையிலேயே முடிவு’ !!

’அரசியல் ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்’ !!

’வீதியில் நடக்க முடியாத நிலை மகிந்தவுக்கு’ !!!

ஜனாதிபதி பதவி விலக வேண்டும்; சட்டத்தரணிகள் கோரிக்கை !!!

மஹிந்தவின் வீட்டின் முன் மலர் வளையம் !!

பாராளுமன்றை அவரசமாக கூட்டுங்கள் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை : நாளை கட்சித்தலைவர்கள் கூட்டம்!!

பாராளுமன்ற வீதி தடைகள் நீக்கம் !!

அவசரகாலச் சட்டம் ஏன்? அரசாங்கம் விளக்கம் !!

அரசாங்கத்தை சஜித்திடம் கொடுக்கிறார் கோட்டா?

சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன்!!

“Go Home Ranil” புதிய போராட்டம் ஆரம்பம் !!

அவசரகால சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை !!

அவசரகால சட்டம் தேவையா? கொதித்தெழுந்தார் ஜீவன் !!

’அவசர நிலை நெருக்கடிக்கு தீர்வாகாது’ !!

அவசர நிலை: கனேடிய உயர்ஸ்தானிகர் கருத்து !!

அவசரகாலச் சட்டம் அதிரடியாக அமுல் !!

இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!!

“சபாநாயகரை வீட்டுக்காவலில் வைப்போம்” !!

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!

ஷிரந்தி பிரதமர் விருந்தினர்: சமூக வலைத்தளங்களில் கடும் சாடல் !!

பாராளுமன்ற வளாகத்தில் பதற்றம்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் !!

“மஹிந்த சரணம் கச்சாமி” பாடுபவர் சாணக்கியன்: ரணில் சாட்டையடி !!

உள்ளாடைகளை உலரவிட்டு எதிர்ப்பு !!

சில மணித்தியாலங்களில் உருவாக்கப்பட்ட “ஹொரு கோ கம” கிராமம்!! (வீடியோ)

சர்வதேச மன்னிப்புச்சபையின் குற்றச்சாட்டு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.