இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: தனியொரு எம்.பி ஆக இருந்து 8வது ஜனாதிபதி ஆன இவர் யார்? (படங்கள், வீடியோ)
இலங்கை வரலாறு காணாத அரசியல் பொருளாதார சிக்கலில், நிச்சயமற்ற நிலையில் தவிக்கும்போது 8-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசியலில் என்றுமே தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக திகழ்ந்து வருகின்றார்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் முதல் நிலவிவரும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த மே மாதம் திடீர் திருப்பமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டபோது, ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால், அடுத்த இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் திருப்பங்களின் முடிவில் தற்போது அவர் ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்றுமே இல்லாத தோல்வியை ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன சந்தித்திருந்தன.
தேர்தலின் ஊடாக ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை கூட ஐக்கிய தேசியக் கட்சியினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
எனினும், இலங்கையில் காணப்படுகின்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாக, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் கிடைத்தது.
இந்த ஒரு நாடாளுமன்ற ஆசனத்தின் ஊடாக, நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்திலுள்ள 225 பேருக்கு மத்தியில் தனியொருவராக அமர்ந்து, தனது அரசியலை நடத்தி வந்தார்.
இவ்வாறு தனியொருவராக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் ரணில் விக்ரமசிங்க, இன்று பிரதமர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக பரிமாணம் பெற்றுள்ள இந்த ரணில் விக்ரமசிங்க யார்?
எசுமண்ட் விக்கிரமசிங்க மற்றும் நளினி விக்ரமசிங்க ஆகியோருக்கு 1949ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி ரணில் விக்ரமசிங்க மகனாக பிறந்தார்.
கொழும்பு ராயல் கல்லூரியில் கல்வியை தொடர்ந்த ரணில் விக்ரமசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை தொடர்ந்தார்.
தொழில் ரீதியாக வழக்குரைஞராக செயற்பட்ட அவர், பின்னர் அரசியலில் நுழைந்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை
கம்பஹா மாவட்டத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி பிரதான அமைப்பாளராக 1970ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டு, பின்னர் பியகம தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பியகம தொகுதியிலிருந்து நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற ரணில் விக்ரமசிங்க, ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கத்தில் இளம் அமைச்சராக பதவி வகித்தார்.
இளையோர் விவகாரம் மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சர் பதவியே, ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்த முதலாவது அமைச்சு பொறுப்பாகும்.
இவ்வாறு தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிர்க்க முடியாத ஒரு தலைமைத்துவத்தை நோக்கி நகரத் தொடங்கினார்.
இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, 1993ம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இதையடுத்து, இடைகால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நியமிக்கப்பட்ட நிலையில், அந்த அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.
ரணில் விக்ரமசிங்க 1993ம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2001ம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் நியமிக்கப்பட்டார்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ரணில் – மைத்திரி கூட்டணி வெற்றியீட்டியதை அடுத்து, மூன்றாவது தடவையாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, நான்காவது தடவையாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2001ம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் நியமிக்கப்பட்டார்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ரணில் – மைத்திரி கூட்டணி வெற்றியீட்டியதை அடுத்து, மூன்றாவது தடவையாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, நான்காவது தடவையாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
எனினும், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது தடவையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.
2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியதை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகிய ரணில் விக்ரமசிங்க, இந்த ஆட்சியின் கீழ் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் பாரிய வீழ்ச்சியுடன் தோல்வியை சந்தித்தார்.
எனினும், தேசிய பட்டியல் ஊடாக ஒரு ஆசனத்தை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, மீண்டும் நாடாளுமன்ற பிரவேசத்தை ரணில் விக்ரமசிங்க பெற்றார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வந்த பின்னணியில், ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமை மற்றும் சர்வதேச விவகார ஆளுமை ஆகியவற்றினால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஆளுமை அவருக்கு உள்ளதாக பெரும்பாலானோர் கூறியிருந்தனர்.
இவ்வாறான நிலையிலேயே, ரணில் விக்கிரமசிங்க 6வது தடவையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் ரீதியில் பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் பலம், பலவீனம், ஆளுமை என்ன?
”ரணில் விக்கிரமசிங்கவின் பொறுமை, ராஜதந்திரிகளுடனான உறவு, அவசர தீர்மானங்களை எடுக்காமை போன்ற பல்வேறு பலங்கள் அவரிடம் உள்ளன. அத்துடன், அனைத்து கட்சிகளுடனான உறவு மற்றும் அனைத்து விதமான அரசியல் விமர்சனங்களையும் தாங்குதல் போன்றவை மிக பெரிய பலமாக இருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு வகையிலான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், அது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க எந்தவித பதிலும் கூறவில்லை. அது அவரின் நிலைப்பாடு என கூறி விமர்சனங்களை தாங்கிக்கொண்;டார். இதனாலேயே, இன்று அவர் பிரதமராக பதவியேற்கும் போதுகூட, அவரால் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியதாக இருக்கின்றது. இவை அவரது பலம்” என்கிறார் ஆர்.சிவராஜா.
ரணில் விக்கிரமசிங்கவின் பலவீனம் என்ன?
”பலவீனம்… மஹிந்த ராஜபக்ஷ, பிரேமதாஸ போன்ற தலைவர்களை போன்று, அடிமட்ட மக்களை கவனிப்பது இல்லை என்பதே அவரது பலவீனமாகும். ஆனால் அவரது பலவீனம் என்னவென்று இப்போது அவருக்கு தெரியும். அதை இப்போது அவர் சரி செய்துக்கொள்ள முடியும். சாதாரண குடிசைவாசியின் வீட்டிற்குள் அவரால் செல்ல முடியாது. ஏனென்றால், அவர் வாழ்ந்த அரசியல் சூழல் அப்படியாக இருந்தது. ஏமாற்றுவதற்காக அவ்வாறு அவரால் செய்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதுவே அவரது பலவீனமாகும். அப்படி செய்திருந்தால் அவர் போலியாகியிருப்பார். ஆனால் இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில், அந்த போலி நாடகத்திற்கு இடமில்லை. அதனாலேயே ரணில் மீண்டும் உள்ளே வருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. பலவீனம் உதவி செய்த ஒரே தலைவன் ரணில் விக்ரமசிங்க தான்” என அவர் கூறுகின்றார்.
ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு உறவுகள்?
”ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம் மிகவும் பரந்தது. சாதாரண நிலையில் வந்து, இன்று இலங்கையின் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். அவருடைய காலப் பகுதியிலேயே இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை எல்லாம் நல்லதொரு இடத்திற்கு வந்தது. அப்போதிருந்து, இன்று வரையான அரசியல் அனுபவம்தான் வெளிநாட்டு தொடர்புகளுக்கு மேலும் உறுதுணையாக இருந்தது.
கொழும்பில் ஒரு வெளிநாட்டு நிகழ்வு நடந்தால், அவர் எதிர்கட்சியில் இருந்தாலும், சாதாரண எம்.பியாக இருந்தாலும் அவருக்கு அந்த நிகழ்வில் முன்னுரிமை கொடுக்கப்படும். நாடாளுமன்றத்தில் இவர் பேச ஆரம்பித்தால், சபாநாயகர் அதற்கான மரியாதை கொடுப்பார். ஏனென்றால், அவர் ஐந்து தடவைகள் பிரதமராக இருந்துள்ளார். அதற்குரிய அனுபவம் தான். சீனாவையும், இந்தியாவையும் எவ்வாறு நடுநிலையாக கையாள வேண்டும் என்பதை அறிந்த ஒரேயொருவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே. அதனாலேயே விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தையை நடத்த அனைத்து நாடுகளும் முன்வந்திருந்தன. அந்த உறவு இருந்ததால் தான் இவ்வாறு நடந்தது. எந்தவொரு தலைவருக்கும் இல்லாத ஒரு சர்வதேச தொடர்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருக்கின்றது. அதுதான் சர்வதேசத்துடனான அவரின் பலம்” என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.