இலங்கையில் சரித்திரம் படைத்த தனி ஒரு எம்.பி. ரணில் விக்கிரமசிங்கே! பொருளாதார பேரழிவை சீரமைப்பாரா? (படங்கள்)
இலங்கை நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் ஒரு ஒரு எம்.பி.யாக இருந்து கொண்டு இலங்கையின் ஜனாதிபதியாகி சரித்திரம் படைத்திருக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. ஆனால் கொந்தளித்து கொண்டிருக்கும் மக்கள் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை ரணில் மேற்கொள்வாரா? என்பதுதான் ஆகப் பெரும் கேள்வி.
இலங்கையின் பொருளாதார சீரழிவால் அந்நாடு மொத்தமாக முடங்கிப் போய்விட்டது. இதனால் இலங்கையின் தென்பகுதி மக்களாகிய சிங்களர் வீதிகளில் இறங்கி போராட்டத்தை நடத்தினர். எந்தவித தத்துவார்த்த பின்னணியுமே இல்லாத இந்தப் போராட்டத்தையே எதிர்கொள்ள முடியாமல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்தவும் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவும் விலகி ஓடிவிட்டனர். அதுவும் கோத்தபாய இலங்கையையே விட்டே தப்பி ஓடிவிட்டார்.
இதனால் இலங்கையின் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்ற எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கும் நிலை உருவானது. இது தொடர்பான வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கே வென்றுள்ளார். இனி 2 ஆண்டுகளுக்கு இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கேதான் இருப்பார். இத்தனைக்கும் இலங்கை நாடாளுமன்றத்தில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி. கூட இல்லை. ரணில் மட்டுமே நியமன எம்.பி. ஆனாலும் ராஜபக்சேக்களின் பேராதரவுடன் இப்போது ஜனாதிபதியாக அரியணை ஏறி இருக்கிறார் ரணில். அவரது நீண்டகால கனவு ஒன்றை ராஜபக்சேக்கள் நிறைவேற்றிக் கொடுத்துவிட்டனர் திரைமறைவில்!
ராஜபக்சேக்களின் மென்மை முகம்
ஆனாலும் ரணிலை ரட்சகராக நம்புவதற்கு இலங்கை மக்கள் தயாராக இல்லை. மாறாக ராஜபக்சேக்களின் மென்மை முகமாகத்தான் ரணிலைப் பார்க்கின்றனர் சிங்கள மக்கள். அதாவது அரசியல் வரலாற்றில் அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்; மென்மை முகம் நார்வே என சொல்லப்படுவது உண்டு. அப்படித்தான் இலங்கையில் ராஜபக்சேக்களின் நார்வே ரணில் விக்கிரமசிங்கே. அதனால் ராஜபக்சேக்களின் மீதான மக்களின் கோபம் கொஞ்சமும் குறையாமல் ரணில் பக்கம் திரும்பி நிற்கிறது.
என்னதான் இலங்கை நாடாளுமன்றத்தால் ரணில் விக்கிரமசிங்கே இன்று வென்றாலும் தாக்குப் பிடிப்பாரா? அல்ல்து திசை தெரியாத தேசம் நோக்கி தப்பி ஓடுவாரா? என்பது இனிவரும் நாட்களில் தெரிந்துவிடும். சீராக்கப்பட வேண்டிய நிதிநிலைமை சீராக்கப்பட வேண்டிய நிதிநிலைமை ரணில் விக்கிரமசிங்கே தற்போது செய்ய வேண்டிய முதன்மையான பணி- சர்வதேச அமைப்புகளிடம் இருந்து கணிசமான நிதியைப் பெற்று இலங்கையில் இயல்பு நிலையை உருவாக்குவது என்பது.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப்-இடம் போதுமான நிதியைப் பெற ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்; அதனைத் தொடர்ந்து இயல்பு வாழ்க்கையை உருவாக்க எரிபொருட்கள் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். ஏற்கனவே எரிபொருள் விநியோகம் தொடர்பில் இந்தியா, சீனா உதவி வருகிறது. ரஷ்யாவிடமும் இலங்கை கையேந்தி நிற்கிறது.
சர்வதேச உறவுகள்
இன்னொரு பக்கம் இந்தியா, சீனாவுடனான உறவுகள்.. இதில் சீனா கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு நெருக்கடி தருவதால் விழிபிதுங்கி நிற்கிறது இலங்கை. அப்படி கடனை திருப்பித் தராவிட்டால் இலங்கை நிலப்பகுதிகளை தாரைவார்க்கும் நிலைமையில் உள்ளது இலங்கை. ஆனால் இந்தியாவோ, இலங்கை தம் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் என்கிற நிலைமையில் கடனுதவி வழங்குகிறது. இந்தியாவையே முழுமையாக இலங்கை சார்ந்தும் இருக்க முடியாது. ஆகையால் சீனாவின் அதிருப்தியை ரணில் எப்படி அறுவடை செய்வார்? என்பது சர்வதேசம் உற்று நோக்குகிற மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று.
மக்கள் கோபம்
இத்தகைய அணுகுமுறைகளை பகிரங்கப்படுத்தி, கொந்தளிப்பில் இருக்கும் மக்களை ஆசுவாசப்படுத்தி அமைதிப்படுத்தி வீடுகளுக்கு திருப்பிவிடுதல் என்பது ரணில் விக்கிரமசிங்கே முன் உள்ள ஆகப்பெரும் பணி. ரணில் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்களா? என்பதைவிட ரணில், மக்கள் குரலுக்கு செவி சாய்ப்பாரா? அல்லது ராணுவம் இருக்கு.. சட்டம் இருக்கு.. என சட்டாம்பிள்ளையாக சாதிக்க முயற்சித்து சறுக்குவாரா? என்பது இன்னொரு எதிர்பார்ப்பாகும்.