ஊடகவியலாளர்களின் திறன்பேசிகளை பறித்த எம்.பிக்கள் !!

பாராளுமன்ற வளாகத்தினுள் இரண்டு ஊடகவியலாளர்களின் திறன்பேசிகள் (ஸ்மாட் ஃபோன்) வலுக்கட்டாயமாக இன்று (17) பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர்களான பிரகீத் பெரேரா மற்றும் கசுன் சமரவீர ஆகியோரின் திறன்பேசிகளே இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஆளும் கட்சி எம்.பி.க்கள் வெளியேறும் வேளையில், குறித்த ஊடகவியலாளர்கள் தமது திறன்பேசியில் நிகழ்வுகளை பதிவுசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான டி.வீரசிங்க மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோர் பலவந்தமாக அவர்களது திறன்பேசிகளை எடுத்துச் சென்றதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனையடுத்து இரண்டு ஊடகவியலாளர்களும் பாராளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியதாகவும் அவர்களது திறன்பேசிகள் இன்னும் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.