பெட்ரோல் விலை குறைப்பு.. விவசாய கடன் ரத்து.. இலங்கையில் வெளியான அடுத்தடுத்த அறிவிப்பு!

இலங்கையில் இரண்டு ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்டுள்ள விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் ரஷ்யா-உக்ரைன் போரை காரணம் காட்டி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் எரிபொருள்களின் விலையை தொடர்ந்து அதிகரித்து வந்தன. ஆனால் கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிந்த போதிலும் எரிபொருட்களின் விலை குறைக்கப்படாமல் இருந்தது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.
இதனிடையே இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசலுக்காக பொதுமக்கள் திண்டாடி வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் போடும் சூழல் உருவாகியது. சிலர் பெட்ரோல், டீசல் போடுவதற்காக வரிசையில் நின்று உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனைத்தொடர்ந்து இலங்கை மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே வேறு நாட்டிற்கு ஓடினார். பின்னர் அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இந்த நிலையில் இலங்கையில் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை அந்நாட்டு மதிப்பில் தலா ரூ. 20 குறைத்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் 5 முறை விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை விற்பனை இரவு 10 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்திய மதிப்பில் ஆக்டேன் 92 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.89-க்கும், ஆக்டேன் 95 ரக பெட்ரோல் விலை ரூ. 119.87-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சூப்பர் டீசல் விலை லிட்டருக்கு ரூ.113.21-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இருந்தும் போதிய அளவு கையிருப்பு இல்லாததால், மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது. அதேபோல் இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்டுள்ள விவசாயிகளின் கடனை ரத்து செய்து அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தனிநபரின் கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடம் அளிக்கக் கூடாது. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் அனைத்துக் கட்சிகளின் ஆட்சியை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.