;
Athirady Tamil News

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

0

இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி இன்னும் அவ்வாறே காணப்படுகின்ற போதிலும், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றது.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரான காலப் பகுதியில் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக சமையல் எரிவாயு வரிசைகள் பெருமளவு குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சமையல் எரிவாயு விநியோகத்தை தற்போது வழமை போன்று விநியோகிக்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன், டீசல் மற்றும் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள் அவ்வாறே காணப்படுகின்ற போதிலும், அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி, வாகன இலக்கத் தகடுகளின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருளை விநியோகிப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

எரிபொருள் பெற புதிய வசதி

எரிபொருள் விநியோகம், மூன்று கட்டங்களாக பிரித்து, வாகன இலக்கத் தகடுகளின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் விநியோகிக்கப்படுகின்றது.

அத்துடன், கியூ ஆர் இலத்திரனியல் நடைமுறையொன்றும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து, அதனூடாக கிடைக்கும் கியூ ஆர் இலக்கத்தை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காண்பித்து, அதனூடாக குறிப்பிட்டளவு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்நிய செலாவணி சர்ச்சை தொடர்ந்து காணப்படுகின்ற நிலையில், எதிர்வரும் 12 மாதங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

நாளாந்த எரிபொருள் விநியோகத்தை உரிய வகையில் முன்னெடுக்க முடியாமை காரணமாகவே, கியூ ஆர் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து முச்சக்கரவண்டிகளும், தமது அதிகாரத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

ஜுலை மாதம் 31ம் தேதிக்கு முன்னர், அனைத்து முச்சக்கரவண்டிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.

தாம் பதிவு செய்யும் போலீஸ் நிலைய அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக மாத்திரம், முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருளை விநியோகிக்க எதிர்வரும் மாதம் முதலாம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், மின்பிறப்பாக்கி உள்ளிட்ட எரிபொருள் ஊடாக பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு பிரதேச செயலகங்கள் பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு பதிவு செய்யப்படுவதன் ஊடாக, அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இயந்திரங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறுகின்றார்.

பஸ் போக்குவரத்து நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்பி வருகின்ற நிலையில், பஸ்களில் தொடர்ந்தும் சனநெரிசல் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

அத்தியாவசிய பொருட்கள் வழமை போன்று கிடைத்தாலும், அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றன.

கடந்த காலப் பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பொருட்களில் விலைகள் அவ்வாறே பல மடங்காக அதிகரித்திருப்பதை காண முடிகின்றது.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு, எரிபொருள் வாங்க வரும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை, முந்தைய வாரங்களுடன் ஒப்பிடும்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.