;
Athirady Tamil News

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

0

அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தி வன்முறைகளை ஒடுக்குவதற்குப் பதிலாக, பலிவாங்கள் செயற்பாடுகளை ஆரம்பித்து வன்முறைச் சம்பவங்களை அரசாங்கம் நாட்டில் மீண்டும் தூண்டுவதாக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பின் கதவு வழியாக வந்து தவறான வழியில் தான் ஜனாதிபதியாகிருந்தாலும், அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தாது நாட்டு மக்கள் கோரிய சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்து, நான் பட்டலந்த ரணில் இல்லை என்பதை நிருபிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று (27) பாராளுமன்றத்தில் கிடைத்தது. எனினும் அதனை அவர் தவறவிட்டுள்ளார்.

அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தி இளைஞர்களைக் கைது செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரவில்லை. அவசரக்காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதால் நாட்டுக்கு எரிபொருளோ, உரமோ நாட்டில் உள்ள வரிசைகளோ குறையப்போவது கிடையாது. அவசரக்காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாட்டுக்கு சர்வதேசம் உதவுமா? சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்குமா? எனவும் டிலான் பெரேரா எம்.பி கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளைக் கொளுத்தியவர்களுக்கும், காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மே 09ஆம் திகதி தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கு நாட்டில் உள்ள சாதாரண சட்டங்களே போதும். ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றவர்களை தண்டித்துவிட்டு மத்திய வங்கியில் கொள்ளையடித்தவரை ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்புவதா? என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.