சீன கப்பல் வரும் முன்பே இலங்கைக்கு இந்தியா வழங்கிய கண்காணிப்பு விமானம்!! (படங்கள்)
இந்தியாவால் அன்பளிப்பாக கையளிக்கப்பட்ட சமுத்திர கண்காணிப்பு விமானமான ‘டோனியர் 228’ ரக விமானம் இன்று இலங்கையை வந்தடைந்தது. இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விமானம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர் 228 சமுத்திர கண்காணிப்பு விமானமே இவ்வாறு இன்று இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு இவ்வாறான மூன்று விமானங்கள் கையளிக்கப்படவுள்ளதுடன், அதில் முதலாவது விமானமே இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவினால் கையளிக்கப்பட்ட இந்த விமானம், இன்று மதியம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பாதுகாப்பு படைகளில் பிரதானிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த டோனியர் ரக விமானத்தின் மூலம், இலத்திரனியல் போர் நடவடிக்கைகள், சமுத்திர கண்காணிப்பு மற்றும் அனர்த்த நிலைமைகளுக்கான பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறுகிய தூரத்திலேயே ஏற்ற முடியும் என்பதுடன், அவசரமாக தரையிறக்கக்கூடிய வசதிகளும் இந்த விமானத்தில் காணப்படுகின்றன.
புதுடில்லியில் 2018ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலான கலந்துரையாடலின் போது, முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த விமானத்தை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
சீனாவின் உளவு கப்பல் ஆகஸ்ட் 17ஆம் தேதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகை தரவுள்ள நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி சமுத்திர கண்காணிப்பு விமானம் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் கப்பல் இலங்கைக்கு வருகைத் தருவதற்கு முதலில் இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக பல ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தியா அதனை நிராகரித்திருந்ததுடன், சீன கப்பல் வருகைத் தருவதற்கு ஒரு நாள் எஞ்சியிருக்கக்கூடிய நிலையில், சமுத்திர கண்காணிப்பு தொடர்பிலான விசேட விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கருத்து வெளியிட்டுள்ளது.
”இந்தியாவுடனான ஒத்துழைப்பினால் ஏனைய துறைகளில் கிடைக்கப்பெற்ற பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோனியர் பரிசளிக்கப்பட்டமையும் முக்கியமானதாக காணப்படுவதுடன், கடல் பாதுகாப்பு குறித்த தேவைகளை இலங்கை நிவர்த்தி செய்வதற்கான ஒரு படியாகவும் கருதப்படுகின்றது. வங்காள விரிகுடா மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களிலுள்ள, இலங்கை போன்ற அயல் மற்றும் நட்பு நாடுகளின் பலத்தினை வலுவாக்குவதிலும் இந்தியாவின் வல்லமை உறுதுணையாக நிற்கின்றமைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.” என இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ”பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன் டோனியர் 228 விமானம் பரிசளிக்கப்படுகின்றமை இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாகும்” என்று உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இரண்டு டர்போபாப் எஞ்சின்களை இரண்டு இறக்கைகளிலும் கொண்டுள்ளது டோனியர் ஆர்288 ரக விமானம். குறைந்த எரிபொருள் பயன்பாடு, குறுகிய தூரத்திலேயே மேலெழும்பும் வசதி, தரையிறங்கும் திறனை இது பெற்றுள்ளது. பகுதியளவு தயாரான ஓடுபாதையில் கூட இந்த விமானத்தால் தரையிறங்கி மேலெழும்ப முடியும்.
இந்த விமானத்தில் இரு விமானிகள் பயணம் செய்யலாம். அதே சமயம், அதன் கட்டுப்பாட்டை தனியாகவும் ஒருவரால் மேற்கொள்ள முடியும். எனினும், பொதுவாக இதை இருவர் இயக்குவதே வழக்கில் உள்ளது.
இதன் மேலெழும்பும் எடை 6,400 கிலோவாகும், அதேபோல தரையிறங்கும்போது 5,900 கிலோ எடையாக இருக்கும்.
இரு பக்க இறக்கைகளிலும் 2 நான்கு முனை பிளேடுகள் அதன் ப்ரொப்பெல்லர்களில் உள்ளன. ஒவ்வொரு இறக்கையிலும் மூன்று ஒருங்கிணைந்த எரிபொருள் கலன்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்த எரிபொருள் தாங்கு திறன் 2,850 லிட்டர்கள் ஆகும். இரண்டு இறக்கைகளில் உள்ள எரிபொருள் கலன்களும் இணைக்கும் வகையில் இதன் வடிவம் உள்ளது.
இந்த விமானத்தின் மொத்த நீளம் 54 அடி 4 அங்குலம். உயரம் 15 அடி 11 அங்குலம். இதன் தரையிறங்கும் கியர்கள், ஹைட்ராலிக் முறையிலானது. 28 வோல்ட் மின்சாரமும் 300 ஆம்புகள் டிசி மின்சாரமும் இதன் இயக்கத்துக்கு தேவைப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை +55 டிகிரியிலும் குறைந்தபட்சம் -40 டிகிரியிலும் இந்த விமானம் எந்த பிரச்னையுமின்றி இயங்கும் திறனைக் கொண்டிருக்கிறது.
இந்திய கடற்படை டோனியர் (INDO – 228), இலகு ரக விமானம் ஆகும். இது 1981ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக தயாரிக்கப்பட்டது. ஜெர்மனியின் டோனியர் ஜிஎம்பிஹெச் நிறுவனம் தான் இந்த ரக விமானத்தை முதலில் தயாரித்தது. அந்த நிறுவனம் 1981-1998 வரையிலான காலகட்டத்தில் 245 விமானங்களை தயாரித்துள்ளது. இதற்கிடையே, 1993இல் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம், டோனியர் ஜிஎம்பிஹெச் உரிமத்தின் கீழ், டோனியர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கத் தொடங்கியது.