;
Athirady Tamil News

இடைக்கால பட்ஜெட்டை தயாரிக்கின்றார் ரணில் !!

0

நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மறுசீரமைக்கும் விதமாக இடைக்கால வரவு செலவு திட்டமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாரித்து வருவதாகவும், அடுத்த ஆறுமாத காலத்துக்கான விசேட வேலைத்திட்டங்களை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் சுயாதீன அணியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு செயற்பாடுகளை முழுமையாக மாற்றி ஜனாதிபதிக்கு ஆதரவான பெரும்பான்மையை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன அணியினர் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட கலந்துரையாடல் ஒன்றினை நேற்று (16) முன்னெடுத்திருந்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் கட்சி அரசியல் செயற்பாடுகளை இப்போது முன்னெடுக்காது சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் சகல கட்சிகளின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அமைச்சரவையில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு, ஆனால் அதற்கு பலர் இணக்கம் தெரிவிக்காத காரணத்தினால் தேசிய சபையை உருவாக்கி அதில் சகல கட்சிகளின் பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக்கொள்வதுடன், 15 பாராளுமன்ற செயற்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ளும் யோசனையை முன்வந்துள்ளார்.

அத்துடன் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை கையாள வேண்டியுள்ள காரணத்தினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவு திட்டத்தின் மூலமாக அதற்கான இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது என்பதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் விரைவில் இடைக்கால வரவுசெலவு திட்டமொன்றை முன்வைப்பதாகவும், அடுத்த ஆறுமாத காலத்துக்காக விசேட வேலைத்திட்டங்களை பாராளுமன்றத்தில் தான் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

21ஆம் திருத்த சட்டத்தை விரைவாக கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்காக இதுவரையில் சகல தரப்பினாலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை தான் கருத்தில் கொள்ளத் தயராக இருப்பதாகவும் சகல தரப்புடனும் இது குறித்து கலந்துரையாடி விரைவில் 21 ஆம் திருத்தத்தை சகல தரப்பின் ஆதரவுடனும் நிறைவேற்ற தாம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் பிரதமர் கலந்துரையாடியுள்ள நிலையில் விரைவில் 21 ஆம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இப்போதைய நெருக்கடி நிலையில் ஜனாதிபதிக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்திற்கு எதிராகவோ கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை அர்த்தமற்றது. மக்கள் அவ்வாறு வலியுறுத்துகின்ற போதிலும் அது அடுத்தகட்ட தேர்தல் நகர்வாக இருக்கும் என்றால் நடவடிக்கை எடுக்க முடியும், ஆனால் இப்போதுள்ள நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்போம். அதற்காக முதலில் குறுகிய காலத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கி பின்னர் மக்களின் ஆணையொன்றை கேட்போம். அதுவரை எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அடுத்தவாரம் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க பிரதமர் தமக்கான பலத்தை உருவாக்கிக்கொண்டுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.