இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் தெரிவில், தமிழ் எம்.பிக்களின் பங்களிப்பு என்ன? (படங்கள்)
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக, வரலாற்றில் முதல் தடவை நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக, ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை பிரஜைகளின் வாக்குகளினாலேயே, ஜனாதிபதி ஒருவரின் தெரிவு இடம்பெறுவது அரசியலமைப்பில் கூறப்பட்ட போதிலும், ஜனாதிபதி ஒருவரின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர், அந்தப் பதவி வெற்றிடமாகும் பட்சத்தில், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பொறுப்பு நாடாளுமன்றம் வசமாகும்.
இதன்படி, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட, இரண்டு ஜனாதிபதிகள் அவ்வாறு நாடாளுமன்ற வாக்குகளின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
1993ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாஸ, தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்ததை அடுத்து, வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கு, டீ.பீ.விஜேதுங்க நியமிக்கப்பட்டதுடன், இன்று பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியை ராஜினாமா செய்தமையின் ஊடாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, டீ.பீ.விஜேதுங்கவை நாடாளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட அதேவேளை, ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் இன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவிக்கு தெரிவாவதற்கு, இலங்கையில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது.
குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகலுக்குக் காரணமாக இருந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்களும், ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்திற்கு எதிராகக் கடும் குரல் எழுப்பி வந்தனர்.
இதற்கமைய, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் பல முறை சந்தித்து, கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
எனினும், போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களும் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் அறிக்கையின் ஊடாக அறிவித்த நிலையில், மற்றுமொரு தரப்பு அதற்கு எதிர்ப்பை வெளியிட்டது.
அதேநேரம், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவதற்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறான ஆதிக்கத்தைச் செலுத்தினார்கள் என்பது குறித்து பிபிசி தமிழ் இன்று ஆராய்கின்றது.
இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகளை மாத்திரம் கொண்ட கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு 10 ஆசனங்கள் காணப்படுகின்றன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், முஸ்லிம் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை கட்சிகள் வசம் 10 ஆசனங்கள் காணப்படுகின்றன.
அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வசமும் பல ஆசனங்கள் காணப்படுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்திருந்த பல தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று, சுயாதீனமாக நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றனர்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வசம் ஒரு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது.
இந்நிலையில், சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தார்களா என்ற கேள்வி எழுந்து வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாஸவிற்கே ஆதரவு வழங்குவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் டளஸ் அழகபெரும ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிலைப்பாட்டை எட்டியிருந்தது.
அவ்வாறாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ரணில் தரப்பைச் சேர்ந்த ஹரின் பெர்ணான்டோ இன்று காலை அறிவித்திருந்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரும், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுக்கு ஆதரவு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவோரும் ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவு தெரிவித்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெளிப்படையாகவே ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் யார் சார்பாக வாக்களித்தனர் என்பது இதுவரை வெளிவரவில்லை.
ரகசிய வாக்கெடுப்பு என்பதன் காரணமாக, யார், யாருக்கு வாக்களித்தனர் என்பது வெளிவராது.
எனினும், எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிகளவிலான வாக்குகளை ரணில் விக்ரமசிங்க தன்வசப்படுத்தினார்.
134 வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெற்றுக்கொண்டார். இதனூடாக தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களித்துள்ளமை உறுதியாகின்றது.