ரணிலை நீக்குவதா? இல்லை? தீர்மானம் ஒத்திவைப்பு !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கில் இருந்து அவரை நீக்குவதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில், பிரதிவாதியாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். பிரதிவாதியிலிருந்து நீக்குவதா? இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானமே, எழுவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் இன்று (02) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனெக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, எல்.டீ.பீ தெஹிதெனிய, மூதூர் பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு அழைக்கப்பட்ட போது பிரதிவாதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதால், பிரதிவாதி என்பதில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவின் நீக்கவேண்டுமென நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கான விடுவிப்பு சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் மட்டுமே உள்ளன. இது அடிப்படை உரிமை மீறல் வழக்காகும் என்பதால், பிரதிவாதியாகவே அவர் பெயர் இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் சார்பில் நீதிமன்றத்தில் பிரசன்னமாய் இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் கருத்துகளுக்கு இணக்குவதாகவும் அதனடிப்படையில், ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், சட்டமா அதிபரின் சார்பில் ஆஜராகியிருந்து மேலதிக சொலிஸிட்டர் ஜெனரால் பிரியந்த நவான, அரசியலமைப்பின் 35(1) உறுப்புரையின் கீழ், ஜனாதிபதிக்கு விடுவிப்பு உரித்துடையதாகும். அதற்கு எதிராக, பதவி நிலையிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியாது. ஆகையால் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருக்கும் ஜனாதிபதியை விடுவிக்கவேண்ணடும் எனக் கேட்டுக்கொண்டார்.
முன்வைக்கப்பட்ட காரணங்களை கவனத்தில் கொண்டு, கட்டளையை பிறப்பிப்பதை பின்னர் ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.