இலங்கை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு!! (படங்கள்)
சிங்கப்பூர் தப்பிச் சென்ற பிறகு அங்கிருந்து தமது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ. அவரது விலகல் கடிதத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன.
இதையடுத்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு முதன்மை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.
கோட்டாபய பதவி விலகியதை அடுத்து ‘கோட்டா வீட்டுக்குப் போ’ (கோட்டா கோ கம) என்ற முழக்கத்தோடு பல மாதங்களாகப் போராட்டம் நடத்திவந்தவர்கள் தற்போது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து கோட்டாபாய, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. இதையடுத்து மே மாதம் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக நேர்ந்தது.
புதிய ஜனாதிபதி தேர்வு
அரசியலமைப்பின் 38 (1) ஆ சரத்திற்கு கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2022ம் ஆண்டு ஜுலை மாதம் 14ஆம் தேதி முதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் செல்லுபடியாகும் என அவர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை, ஜனாதிபதியின் பொறுப்புக்களை நிறைவேற்றும் கடமை, அரசியலமைப்பிற்கு அமைய, பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தெளிவுபடுத்தியதை போன்று, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனநாயக ரீதியில் இந்த நடவடிக்கைகளை மிக விரைவில் முன்னெடுப்பது தனது நோக்கம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கிறார்.
எதிர்வரும் 7 நாட்களில் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இதன்படி, எதிர்வரும் 16ம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றம் கூடும் எனவும், அன்றைய தினத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகை தருமாரும் அவர் அறிவித்தல் பிறப்பித்துள்ளார்.