;
Athirady Tamil News

“கொடியும் வேண்டாம், அதிமேதகு என அழைக்கவும் வேண்டாம்” – ரணில்!!

0

இலங்கையில் தமது ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டத்தை மீள அமல்படுத்துவதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘பதில் ஜனாதிபதி’ (Acting President) ஆக பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய விடயங்களின் தொகுப்பு இதோ.

1. இலங்கை அரசியலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதனால், ‘பதில் ஜனாதிபதி’ ஆக பதவி வகிக்கும் இந்த குறுகிய காலத்திற்குள், மிக முக்கிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளேன்.

2. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீண்டும் முழுமையாக அமல்படுத்த எதிர்பார்க்கின்றேன். அதற்காக நாடாளுமன்றத்திற்கு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான பின்புலத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளேன்.

3. நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை ஸ்திரப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

4.அமைதி வழி போராட்டத்தை 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன். எனினும், சிலர் வன்முறைகளை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள். எதிர்வரும் வாரம் புதிய ஜனாதிபதி தெரிவின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க சிலர் முயற்சித்து வருவதாக அறிகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுயாதீனமாக வாக்களிக்கும் பின்புலத்தை நான் ஏற்படுத்திக் கொடுப்பேன். அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கு நாம் இடமளிக்க போவதில்லை.

5. ஜனநாயகத்தை மூழ்கடித்து, பாசிசவாத கொள்கைகளின் அடிப்படையில் நாட்டை தீக்கிரையாக்கும் குழுக்கள் இருக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் ராணுவத்தின் துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்களை இந்த குழுக்களே சூறையாடின. ராணுவத்தின் 24 உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். உண்மையான போராட்டக்காரர்கள் இவ்வாறு செயற்பட மாட்டார்கள்.

6. உண்மையான போராட்டக்காரர்களுடன் இணைந்து, ஜனநாயகம் மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன். அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன். அரசியலமைப்பை மீறிய செயற்பாடுகளுக்கு நான் இடமளிக்க போவதில்லை. ஆதரவு வழங்க போவதில்லை. அரசியலமைப்புக்கு வெளியில் செயற்பட மாட்டேன்.

7. சட்டம் மற்றும் ஒழுங்கு வீழ்ச்சி அடையுமாக இருந்தால், அது எமது பொருளாதாரத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

9. எரிபொருள், மின்சாரம், நீர்விநியோகம், உணவு பொருள் விநியோகம் ஆகியன தடைப்படக்கூடும். இந்த அபாயகரமான நிலைமையை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

10. சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதானி, போலீஸ் மாஅதிபர் மற்றும் முப்படை தளபதிகளின் தலைமையிலான விசேட குழுவொன்றை நான் ஸ்தாபித்துள்ளேன். அரசியல் அழுத்தங்கள் இல்லாது, சுயாதீனமாக செயற்படுவதற்கான சுதந்திரத்தை நான் வழங்கியுள்ளேன்.

11. சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு, நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளும் உடனடியாக பொது இணக்கப்பாடொன்றிற்கு வர வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

12. இந்த நெருக்கடியிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும்.

13. பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, முக்கியமான இரண்டு தீர்மானங்களை எடுக்கின்றேன். ஜனாதிபதியை அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ‘அதிமேதகு’ என்ற வசனத்தை அதிகாரபூர்வமாக ரத்து செய்கின்றேன். அதேபோன்று, ஜனாதிபதி கொடியை ரத்து செய்கின்றேன். நாடொன்றிற்கு ‘தேசிய கொடி’ மாத்திரமே இருக்க வேண்டும். ஒரு கொடியின் கீழ் நிழலை பெற்று நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.