மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணமானார் கோட்டாபய!

கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தினை அடுத்து கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியில் இருந்து நேற்று பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவர் பதவி விலகாது ராணுவ ஜெட் விமானத்தில் மாலைத்தீவு சென்றடைந்தார்.
பின்னர் அங்கிருந்து SQ437 என்ற விமானத்தில் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் பாதுகாப்பு நிலைமை காரணமாக பயணம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக கோட்டாபய ராஜபக்ச தனி விமானத்தில் மாலைதீவிலிருந்து சவூதி அரேபிய விமான சேவையின் எஸ்.வீ. 788 விமானத்தில் இன்று சிங்கப்பூர் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இந்த விமானத்தில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு சென்று தரையிறங்கியதன் பின்னர் அவர் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.