புலிகள் இயக்கத்தை போல போராட்டக்காரர்களை இரண்டாக பிரித்து மோதவிடும் ரணிலின் சதி-எச்சரிக்கும் குரல்கள்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தியது போல கொழும்பில் போராடும் மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே என்கிற எச்சரிக்கைக் குரல்கள் இலங்கையில் பலமாக எதிரொலிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வ வல்லமையுடன் இருந்த காலத்தில் சமாதனப் பேச்சுகள் எனும் வலை விரித்தவர் ரணில் விக்கிரமசிங்கே. இதனால் சர்வதேச நாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நெருக்கடி கொடுத்து சமாதானப் பேச்சுகளில் ஈடுபட வைத்தது. அங்கிருந்தே விடுதலைப் புலிகளின் பின்னடைவும் தொடங்கியது.
விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரவழைத்து கருணா எனும் துரோகியை உருவாக்கி அந்த இயக்கத்தை மேலும் மேலும் பலவீனப்படுத்தியவர் ரணில் விக்கிரமசிங்கே. இந்த பலவீனத்தை அறுவடை செய்தது ராஜபக்சே சகோதரர்கள். இதனால் இருதரப்பும் எப்போதும் திரைமறைவில் இணக்கமாகத்தான் இருப்பர்.
இப்போது ஒட்டுமொத்த இலங்கையுமே பெரும் பேரழிவில் சிக்கி இருக்கிறது. பல மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்ற போதும், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகை அத்தனையும் கைப்பற்றப்பட்ட போதும் வன்முறைகளும் உயிரிழப்புகளும் இல்லை. ராணுவமும் தனது அதிகாரத்தை வெளிக்காட்டவில்லை. ஆனால் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பி ஓடியதும் ரணில் விக்கிரமசிங்கே மெல்ல மெல்ல ஒரு சர்வாதிகாரியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார். அமைதியாக போராடும் மக்களை இரண்டாகப் பிளவுபடுத்தி இலங்கை நாடாளுமன்றத்தைக் கைப்பற்றும்படி தூண்டிவிடுகிறார். இன்னொரு பக்கம் போராடும் மக்களை ஒடுக்க ராணுவத்தை பெருமளவில் களமிறக்கி இருக்கிறார். இதனால் இலங்கையில் ரத்த ஆறு ஓடும் அபாயம் உள்ளது.
இதனைத்தான் இலங்கை மலையகத் தமிழர் தலைவர் மனோ கணேசனும் சுட்டிக்காட்டுகிறார். இது தொடர்பாக மனோ கணேசன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு போராட்டக்காரரின் வீடியோவை வெளியிட்டுள்ள அதன் சாரம்சம் தொடர்பாக பதிவிட்டுள்ளதாவது: புலிகளை பிளந்த ரணிலுக்கு எம்மை பிளப்பது சுலபம் என காலிமுக போராட்ட குரலொன்று கூறுகிறது.. 1)பாராளுமன்றத்தையும் ஆக்கிரமித்து, அரசியலமைப்பு மூலமாக எமக்கு தீர்வு தரும் கடைசி அமைப்பையும் அழிக்க வேண்டாம் என்கிறார். 2)ஏற்கனவே போராட்டக்காரர்கள், ஆக்கிரமிக்க வேண்டிய ஜனாதிபதி, பிரதமர் செயலகங்களை ஆக்கிரமித்து விட்டோம். அவ்வேளைகளில் ஒரு உயிர் சேதமும் ஏற்பட வில்லை. அதாவது அவ்வேளைகளில் இராணுவம் சுடவில்லை. அதாவது உயிர்கொல்லி தோட்டாக்கள்/live ammunition இராணுவத்தால் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஆனால், இப்போது சுடலாம் என்கிறார். 3)பெதும் கேர்னர் (Pathum Kerner) என்ற நபர் காலி முக போராட்டத்தில் நுழைந்து இத்தகைய “பாராளுமன்றத்தை பிடி” என்ற தவறான வழிகாட்டலை தருவதாக சொல்கிறார். 4)இதன்மூலம் போராட்டத்தில் பிளவு வருகிறது. “புலிகளை” பிளந்த ரணிலுக்கு இந்த போராட்டத்தையும் பிளப்பது சுலபம் என்கிறார். 5)பாராளுமன்றத்தில், சபாநாயகர் இல்லத்தில், கை வைத்தால் உலகமும் எம்மை நிராகரிக்கும். ஏற்கனவே எமக்கு ஆதரவாக இருந்த “சட்டத்தரணிகள்” சங்கமும் இப்போது எம்மை விமர்சிக்கிறது என்கிறார்.